மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தின் அரசு உதவி பெறும் மழலையர் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த குழந்தைகளை, பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் பள்ளி நிர்வாகத்தினர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆதீன மடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குழந்தைகளின் நாக்கில் மயிலிறகால் தேன் தடவி, நெல்லில் அகரம் எழுத வைத்து ஆரம்பக் கல்வியான ‘வித்யாரம்பம்’ நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அருளாசி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.