பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

காயல்பட்டினம், அக். 20:

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் உத்திரா கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியைச் சேர்ந்த உத்திரா, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தக் கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி, கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரித்து, குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

செவிலியர் உத்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்த உத்திராவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய குற்றங்களில் ஈடுபட நினைப்போருக்கு உரிய தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும்.

பெண்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்யும் வகையில், அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *