தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்களைத் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ கோரிக்கை மனு அளித்தார்.
மனு விவரம்
கம்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் விவசாயம் மற்றும் பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும்
இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரி, மழைநீரைச் சேமிக்கும் வகையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், விவசாயத்திற்கான நீராதாரங்களையும் பாதுகாக்க முடியும்.
மேலும், கிராமப்புறங்களில் சுகாதாரப் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
பொதுமக்களின் குடிநீர்த் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போதுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை விரிவுபடுத்தி, குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைத்து, அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே, கம்பம் தொகுதியின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் மனுவில் கூறப்பட்டுள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.