தென்காசி, அக். 29:

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற சம்பவத்தில், 12 மணி நேரத்திற்குள் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் சுரேஷ், ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை வெளியூருக்குச் செல்வதற்கு முன்பாக, கடையநல்லூர் நகராட்சி அருகே உள்ள பிரபல பரோட்டா கடைக்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.

அப்போது தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு, அதன் பெட்டியில் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை வைத்துள்ளார். இதைக் கவனித்த மர்ம நபர் ஒருவர், மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்த சுரேஷ், மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் கிறிஸ்டி, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதன் அடிப்படையில், மாவடிக்கால் ஓடைத் தெருவைச் சேர்ந்த முருகமணி (42) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச் சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் சந்தேக நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட கடையநல்லூர் போலீஸாரை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *