திருவாரூர், நவ.09
திருவாரூரில் இருந்து நாகலூர் கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு வெற்றிப் பயண பேருந்து, வழியில் பழுதடைந்து நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் மாற்றுப் பேருந்து வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருவாரூர்–நாகப்பட்டினம் சாலையில் சென்ற பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் இருந்து நாகலூர் கிராமத்திற்கு TN68 N 1416 என்ற பதிவெண் கொண்ட B5 வழித்தட அரசு வெற்றிப் பயண பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்து மறுநாளான நேற்று, திருவாரூரில் இருந்து நாகலூர் நோக்கி புறப்பட்ட இந்தப் பேருந்து வாழவாய்க்கால் பகுதியில் சென்றபோது திடீரென பழுதடைந்தது. இதையடுத்து பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைப்பதாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் மாற்றுப் பேருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாகலூர் கிராமத்தில் இருந்து மற்றொரு வெற்றிப் பயணப் பேருந்து திருவாரூர் நோக்கி வந்தது. அந்தப் பேருந்து திருவாரூர் பேருந்து நிலையம் சென்ற பின்னர் மீண்டும் நாகலூர் நோக்கி இயக்கப்படுவது வழக்கம் என்பதால், அதில் பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் பயணிகள் காத்திருந்தனர். ஆனால் அந்தப் பேருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் பயணிகளின் காத்திருப்பு நீடித்தது.
இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, திருவாரூர்–நாகப்பட்டினம் சாலையில் சென்ற பேருந்துகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாழவாய்க்கால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைத் தொடர்புகொண்டு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பொதுமக்கள் ஆதங்கம்:
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கூறுகையில், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என அறிவித்து பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பல பேருந்துகள் ஆங்காங்கே பழுதடைந்து நின்றுவிடுகின்றன. அவ்வாறு பழுதாகி நிற்கும் பேருந்துகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. இதனால் தினமும் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எங்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை. கட்டணம் செலுத்தி பயணம் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால், உரிய நேரத்தில் தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். இரண்டு மணி நேரம் வெயிலில் காத்திருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தக்கூடாது. இலவசப் பயணத்தைவிட எங்களுக்கு பாதுகாப்பான, தரமான, குறித்த நேரத்திலான பேருந்து சேவையே முக்கியம் என வேதனையுடன் தெரிவித்தனர்.
அரசுப் பேருந்து பழுதடைந்து நின்றதுடன், மாற்றுப் பேருந்தும் உரிய நேரத்தில் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வாழவாய்க்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.