மன்னார்குடி., நவ.09-
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாகச் சித்தரித்து, மேகதாட்டு அணை கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:..
மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மேகதாட்டு பகுதியில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதும் தமிழக விவசாயிகளின் உரிமைகளுக்கு எதிரானது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது என்பதை காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் 2025-ம் ஆண்டு வழங்கிய உத்தரவில், கர்நாடக அரசு தனது திட்டங்களைத் தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும், அந்தத் திட்டம் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுவது தவறான விளக்கமாகும்.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகதாட்டு அணை கட்ட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் அவசியம். எனவே, கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். டி.கே.சிவக்குமார் தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது இரு மாநில விவசாயிகளிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
மேலும், மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவாக கர்நாடக அரசு மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்காததால் அது எதிர்பார்த்த ஆதரவைப் பெறவில்லை. இதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் மேகதாட்டு அணை கட்டுவதற்கு தடை விதித்தது. பின்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையால் அந்தத் தடை நீக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு அதனை ஏற்கவில்லை.
தற்போது மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசின் அதிகாரிகள் மேகதாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இதற்கு மாற்றாக, பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள ராசிமணலில் தமிழக அரசு அணை கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இதற்கான ஒப்புதல் கடிதத்தை தமிழக அரசு 2024-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ளது. எனவே, ராசிமணல் அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்கவும், ராசிமணல் அணைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.