திருத்துறைப்பூண்டி., நவ.19-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் 3 வயது ப்ரீகேஜி மாணவனின் கைகளை கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரது மகன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பள்ளி ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக சிறுவன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுவனின் இரு கைகளையும் கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் பெண் உதவியாளர் செல்வி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பெண் உதவியாளர் செல்வியை கைது செய்த போலீசார், தலைமறைவான ஆசிரியையை தேடி வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வளரும் தமிழகம் கட்சியினர் திருத்துறைப்பூண்டி – திருவாரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணியாகச் சென்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் நுழைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியின் நுழைவாயில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருபுறம் சாலை மறியல், மறுபுறம் பள்ளி முற்றுகைப் போராட்டம் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால் திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.