தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணிக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மண்டல இணை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாமில், கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், கால்நடை வளர்ப்போருக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
இதில் மாடுகள், வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி செலுத்துதல், சினைப்பரிசோதனை, கருவுறாமைக்கான சிகிச்சை மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
இந்த முகாமின் மூலம் 160 மாடுகள், 210 வெள்ளாடுகள், 250 கோழிகள், 20 வீட்டு செல்லப்பிராணிகள் என மொத்தம் 640 கால்நடைகள் பயனடைந்தன.முகாமில் கும்பகோணம் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் இளையராஜா கலந்து கொண்டு, சிறந்த கிடேரி கன்று மற்றும் சிறந்த கால்நடைகளுக்குப் பரிசுகள் வழங்கினார். மேலும், கால்நடைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சிக்குத் தேவையான தாது உப்புகளையும் வழங்கினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பனந்தாள் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் தேவராஜ், சௌந்தர்ராஜன் மற்றும் கால்நடை ஆய்வாளர் உதவியாளர்கள் நாகவள்ளி, லதா ஆகியோர் செய்திருந்தனர்.பால்வளத்துறை இளநிலை ஆய்வாளர் அரவிந்த், ஆவின் விரிவாக்க அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.