தஞ்சாவூர் :திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பதற்கு தமிழக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ்.ஆனந்த் கூறியதாவது:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் தெளிவான அனுமதியை வழங்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு அந்த உத்தரவை மதிக்காமல் தீபம் ஏற்ற அனுமதி மறுத்திருப்பது ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

இந்துக்களையும், இந்து அமைப்பினர்களையும் கைது செய்வதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் தடுக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விட தமிழக அரசு பெரியதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை மதிக்கும் தமிழக அரசு, இந்துக்களை மட்டும் தொடர்ந்து புண்படுத்துவதும், அவர்களின் வழிபாட்டு உரிமைகளைத் தடுப்பதும் சமூக நீதியாகுமா? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத அரசு எதற்காக ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்றும் அவர் கேட்டார்.

பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தையும், கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத தமிழக அரசின் போக்கை தமிழக சிவசேனா சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *