மன்னார்குடி.,

“நீதிமன்றம் உங்கள் வாசலில்” என்ற நோக்கத்தில், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதில் நீதித்துறை சேவைகளைப் பெறும் வகையில், மன்னார்குடியில் நடமாடும் இ-சேவை மைய வாகனம் தொடங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சார்பு நீதிபதி எஸ். முத்துராமன், நீதிபதிகள் அழகேசன், தமிழ் முருகன் ஆகியோர் நடமாடும் இ-சேவை மைய வாகனத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த வாகனத்தின் மூலம் வழக்கு விவரங்கள், வழக்கு தாக்கல் மற்றும் அன்றாட வழக்குப் பட்டியல்களை இணையவழியில் நேரடியாகப் பார்வையிடலாம். மேலும், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வழக்கு ஆவணங்களை இணையவழியில் தாக்கல் செய்யவும், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் நகல்களை மின்னஞ்சல் அல்லது செய்தி செயலிகள் மூலம் உடனடியாகப் பெறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மன்னார்குடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நடமாடும் இ-சேவை மையத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் கலைவாணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

அப்போது பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் சட்டம் தொடர்பான சந்தேகங்களை நீதிமன்ற ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு நீதிமன்ற ஊழியர்கள் உரிய சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

நீதித்துறை சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கொண்டு செல்லும் இந்த முயற்சி, கிராமப்புற மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *