மன்னார்குடி.,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேசம் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்ப்பழத்தோட்டம் கிராமம் மற்றும் ராஜப்பா நகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மன்னார்குடி–திருமக்கோட்டை சாலையில் மெய்ப்பழத்தோட்டம் பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழலகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. நிழலகத்தின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. மேற்கூரை, பக்கவாட்டு சுவர்கள் மற்றும் தரைப்பகுதி ஆகியவை சேதமடைந்துள்ளன. மேலும், நிழலகத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளும் உடைந்து கிடக்கின்றன.

நிழலகத்தின் உள்ளே காலி மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், அப்பகுதி முழுவதும் அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதால், பயணிகள் அங்கு நிற்பதற்கே அச்சப்படுகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மன்னார்குடி–திருமக்கோட்டை சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையிலும் வெயிலிலும் ஒதுங்குவதற்கு இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை பாதுகாப்பான முறையில் அகற்றிவிட்டு, அதே பகுதியில் புதிய பயணிகள் நிழலகம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *