தமிழ் மொழியை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழக மொழி பாடம் 4 பருவங்களாக உள்ளதை வெறும் 2 பருவங்களாக குறைக்காதே, பருவத்திற்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ்மொழி பாடத்தை வெறும் 8 மணி நேரமாக குறைக்காதே, தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனாலும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி, தாகூர் கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கல்லூரி உள்பட புதுவை அரசின் கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதேசி மில் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா கலந்துகொண்டு பேசியதாவது:-கல்லூரிகளில் அடிப்படை வசதி கேட்டு மாணவ, மாணவிகள் போராடிய காலம் மாறி தற்போது தமிழ்மொழிக்காக வீதிக்கு வந்துள்ளனர். தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியில் பேசும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கொடுக்கிறார்கள். அதேபோல் புதுச்சேரி அரசு கொடுக்குமா? மாணவிகளுக்கு பிங்க் நிற பஸ் இயக்கப்படும் என்று கூறிய அமைச்சரையே பதவியில் இருந்து எடுத்துவிட்டார்கள். நம் மொழிக்கு, இனத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று உறுதியாக உள்ளது. இங்கு நடப்பது முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆட்சியா? பா.ஜ.க. ஆட்சியா? மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முதல்-அமைச்சர் சுயமாக முடிவெடுத்து செயல்பட வேண்டும்.இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
மாணவிகள் போராட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.எம்.பி. லோகையன், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால், தொகுதி செயலாளர் இரா. சக்திவேல், மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி. மணிமாறன், மகளிர் அணி அமைப்பாளர் காய்த்ரி ஸ்ரீகாந்த், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாலபாரதி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் யோகேஷ், மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சுவாமிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தே பொழிலன், தமிழ்வாணன், சிவச்சந்திரன், பெரியார் சிந்தையாளர் இயக்க தீனா, பி.போல்டு இயக்க பஷீர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், ஆம் ஆத்மி சுந்தர்ராஜன், கோவலன், வீராசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *