மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், வெயிலின் தாக்கத்தினை சமாளிக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் வெப்பத்தினை பொதுமக்கள் எதிர்கொள்ள வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் மதிய வேளையில் குறிப்பாக 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பொதுமக்கள் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும். பயணத்தின் போது குடிநீரை கொண்டு செல்லவும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ. ஆர்.எஸ்.கரைசல், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களைப் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்க வேண்டும். அலைப்பேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கவும் வேண்டும்.

போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வேண்டும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடை தீவனங்களை வெட்ட வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் அருந்தச் செய்து பாதுகாக்க வேண்டும்.

மேலும், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் இத்தகைய நீர் மோர் பந்தல்கள் மூலம் சீராக தண்ணீர், நீர் மோர் வழங்கப்பட்டு வருவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *