கூவத்தூர் குறுகலான சாலை விரிவாக்கம் : கிராமமக்கள் மகிழ்ச்சி
புதுப்பட்டினம், பிப்.17
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பவுஞ்சூர் செல்லும் தார்சாலை நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த சாலை மிகவும் குறுகலாகவும் வளைவாகவும் உள்ளதால் பள்ளி வாகனங்கள்,கார் மற்றும் அரசு பேருந்துகள் சென்று வருவதில் இடையூறாக இருந்தது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் நடந்துள்ளது.
இது குறித்து மலையூர் மற்றும் கூவத்தூர் பகுதி மக்கள் சாலை விரிவாக்கம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.சகாதேவனிடம் கிராம சபை கூட்டத்தில் பல முறை நேரில் புகார் செய்தனர்.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சகாதேவன் கிராம சபை கூட்டங்களில் அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றினார்.இந்த தீர்மானங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்யூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பாபு, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு தலைவர் சகாதேவன் கோரிக்கை மனு அனுப்பினர். இதையடுத்து குறுகலான சாலையை விரிவாக்கம் செய்தும் வளைவுகள் இல்லாத சாலையாக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மலையூர் பகுதியில் இருந்து மாணவர் விடுதி வரை 3 இடங்களில் கல்வெட்டுகளுடன் ரூ ஒரு கோடியே 99 இலட்சம் செலவில் நடைபெற்றுவரும் இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சகாதேவன் நேரில் சென்று பார்வையிட்டார்.அரசின் இந்த நடவடிக்கைக்கு ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.