தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பயணிகள் நிழற்குடம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, இந்த பேருந்து நிறுத்தம் முதலில் 1965ஆம் ஆண்டு “எம்ஜிஆர் மன்றம்” என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் “எம்ஜிஆர் பேருந்து நிறுத்தம்” என மாற்றப்பட்டது.


இதன் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை சில தனிநபர்கள் பத்திரம் போட முயற்சித்ததாகவும், அதனால் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தை இடித்ததாகவும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் (அதிமுக) கண்டனம் தெரிவித்திருந்தார்.


ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அந்தோணி பிரகாஷ் மார்க்ஸ்லின் (திமுக) மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
“தூத்துக்குடி மாநகரில் ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ள வட்டக்கோவில் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்க பணிக்காக பழைய பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிதாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பேருந்து நிறுத்தம் தெற்கு பகுதியை நோக்கி இருந்த நிலையில், தற்போது மேற்கு பகுதியை நோக்கி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் பொய்யானது.

மேலும், மாமன்ற உறுப்பினராகவும், பின்னர் மேயராகவும் இருந்த போது மாநகராட்சிக்கு சொந்தமான அந்த 1 ஏக்கர் நிலத்தை மீட்க அந்தோணி கிரேஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அப்போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்,” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *