திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “தமிழியல் ஆய்வில் புதிய களங்கள்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கின் தொடக்க விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி, கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன், “எனது பள்ளிப் பருவத்தில் தமிழ் ஆசிரியர் குற்றாலக் குறவஞ்சி பாடத்தை மிகுந்த ஆர்வத்துடன் நடத்தியது இன்றும் என் மனதில் பசுமையாக நிழலாடுகிறது; அந்தப் பெருமை முழுவதும் என் ஆசிரியருக்கே சேரும்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், மாணவர்கள் வெறும் பாடத்திட்டத்தைச் சார்ந்து தேர்ச்சி பெறுவதோடு நின்றுவிடாமல், இக்கருத்தரங்கின் தலைப்பிற்கேற்ப தமிழியல் ஆய்வில் உள்ள புதிய பரிமாணங்களைக் கண்டறிந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் புதிய சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் புல முதன்மையர் பேராசிரியர் ரவி, தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி. ரமேஷ் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் சு. முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் மொழியியல், சமூகவியல், நவீன இலக்கியம், கலைகள், இடைக்கால மற்றும் செவ்வியல் ஆய்வுகள், பண்பாடு, இலக்கணம் மற்றும் வரலாறு உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள ஆய்வு வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்களது அரிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்விழாவிற்கு முனைவர் ச சுபாஷ் வரவேற்புரை வழங்கினார் மற்றும் முனைவர் ரமேஷ் குமார் நன்றி நல்கினார்.