தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அமராவதி ஆற்றில் தூய்மை பணி – வீதி லீடர்ஸ் தன்னார்வலர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள கோவில் அருகே, வீதி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் சார்பில் தூய்மை பணி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சுரேஷ் நாயகன் தலைமை வகித்தார். இதில் பாலகிருஷ்ணன், கேப்டன் சுப்பிரமணியன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
ஆற்றங்கரையில் உள்ள படிக்கட்டுப் பகுதியிலிருந்து ஆற்றுப் படுகைக்குள் இறங்கி, பொதுமக்கள் மற்றும் இயற்கை காரணங்களால் தேங்கியிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை தூய்மைப் பணிக்கான கருவிகளைப் பயன்படுத்தி அகற்றினர். சுமார் 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
மேலும், அமராவதி ஆறு குடிநீர், விவசாயம், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கியமான நீராதாரமாக இருப்பதை எடுத்துரைத்து, ஆற்றுப் படுகைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
இந்த தூய்மை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.