C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு கட்டுப்பாட்டு அறை, சமூக ஊடகம் மற்றும் TNGELA, சிவிஜில்(Cvigil), கருடா (GARUDA) கட்டுப்பாட்டு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தேர்தல் நடத்தை விதிகள் 15.03.2026 அன்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் 30.03.2026 முதல் 06.04.2026 வரையும், வேட்பு மனு பரிசீலனை 07.04.2026 அன்றும், வேட்பு மனு வாபஸ் 09.04.2026 அன்றும், சட்டமன்ற பொதுத் தேர்தல் 23.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெற உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதை தொடர்ந்து தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0037, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1950, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04142-290119 , சமூக வலைதள வாடஸ் ஆப் எண்: 8248774852 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிற்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் வாயிலாக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான சான்றிதழ் வழங்குதல், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் செய்திகள் குறித்து 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் C-Vigil mobile app மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இதற்காக சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.
ஷக்சம் செயலி (Saksham Mobile App) மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம், போக்குவரத்து வசதி கோரலாம், சக்கர நாற்காலிகள் போன்ற உதவிகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

VOTERS’ SERVICE PORTAL (https://voters.eci.gov.in/)
என்ற இணையதள முகவரி மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம். மேலும் புதிய வாக்காளர் பதிவு செய்யலாம், வாக்காளர் அட்டைக்கு திருத்தங்கள் செய்யலாம் மற்றும் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் அளிக்கும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.இதன் மூலம் வாக்காளர்கள் தேர்தல் சேவைகளை எளிதாக பெற முடியும்.

கடலூர் மாவட்டத்தில் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் நகரபகுதிகளில் 734 வாக்குச்சாவடிகளும் ஊரகப்பகுதிகளில் 1,856 வாக்குச்சாவடிகளும் உள்ளன. 1,328 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கடலூர் மாவட்டத்தில் 9,91,527-ஆண் வாக்காளர்களும் 10,23,976-பெண் வாக்காளர்களும் மற்றும் 293 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 20,15,796 வாக்காளர்கள் உள்ளனர். 16.03.2026 நிலவரப்படி 9,94,590 ஆண் வாக்காளர்களும் 10,28,317 – பெண் வாக்காளர்களும் மற்றும் 298 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 20,23,205 வாக்காளர்கள் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி நிலையங்கள் சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மொத்தம் 9 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. மேலும் முழுவதும் மாற்றுத்திறனாளிகளால் ஒரு வாக்குச்சாவடி நிலையம் நிர்வகிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் வழங்குவதை தடுக்கும்பொருட்டு 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, பிற துறை அலுவலர்கள் 17,087 மற்றும் காவல்துறையினர் 3,608 அலுவலர்கள் ஆக மொத்தம் சுமார் 20,695-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாநில எல்லையில் ஆறு எல்லை சோதனைச் சாவடிகளில் 360° கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 10 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 27 பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் பொருள் வாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடத்தி தேர்தல் நடைமுறையில் உள்ளதால் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் குறித்து தெரியப்படுத்தப்படும்.மேலும், அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்திடும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளும், வாக்காளர்கள் எளிதாக வாக்களித்திடும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திருநாவுக்கரசு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *