கரூர் செய்தியாளர் மரியான் பாபு
அதிமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு.. நடைபெற உள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுக்காலியூர் பகுதியில் வந்த போது அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது வான வேடிக்கைகளும் நடத்தி தங்களது வேட்பாளர்களை கட்சியினர் உற்சாகப்படுத்தினர்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு செல்வகுமார், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மருத்துவர் திவ்யா, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரத்தின் மகன் கருணாகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து தங்களது ஆதரவையும்,வாழ்த்தையும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூரில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக வெல்லும் எனவும் பண பலம் படைத்து ஆட்டம் போடும் திமுகவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று கரூரில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து வேட்பாளர்கள் மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.