ரோட்டரி மாவட்டம் 3206-க்கு உட்பட்ட கோவை மில்லேனியம் ரோட்டரி சங்கத்தின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதஙி ஏற்பு விழா, அவிநாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
இதில் சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சுந்தரமூர்த்தி தலைவர் பொறுப்பையும், தானேஷ் செயலாளர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர்.இதனை தொடர்ந்து பல்வேறு நிலை நிர்வாகிகளாக பொறுப்பேற்ற அனைவரும், சமூக சேவை, மனிதநேயம், தலைமைத்துவம் மற்றும் பொதுநலப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல உறுதிமொழி ஏற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், சமூக நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் ரோட்டரி இயக்கத்தின் சேவைகளை பாராட்டியதுடன், மக்களின் வாழ்க்கையில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என வாழ்த்தினார்.
விழாவில் மாவட்ட இயக்குநர் ஓய்வு பெற்ற விமானப்படை துணை மார்ஷல் டாக்டர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார்.புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், புதுமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சமூக சேவையை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
புதிய தலைவராக பொறுப்பேற்ற சுந்தரமூர்த்தி, உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரித்தல், இளைஞர் மேம்பாடு, மருத்துவ சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களை முன்னெடுப்பதே இந்த ஆண்டின் முக்கிய இலக்குகள் என தெரிவித்தார். செயலாளர் தானேஷ், அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மகளிர் பிரிவு தலைவராக ஹேமா சுந்தரமூர்த்தி,செயலாளராக கவிதா தானேஷ் ஆகியோரும் இதே போல இளையோர் பிரிவின் புதிய தலைவராக பிரணாயா சுந்தரமூர்த்தி,செயலாளராக ரீமா தானேஷ் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விழாவையொட்டி, சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக சேவாலயம் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள் மற்றும் எழுதுபொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.