ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவில், ‘ஈகோ’ பிரச்சினையால் கடைகளை பல லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளதால், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலில், கடந்த 15ல் நடந்த ஏலத்தை ரத்து செய்து, அரசே விலை நிர்ணயித்து நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் திருவிழா அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், அந்தியூர் வெள்ளைப்பிள்ளையார் கோவிலிருந்து, கிருஷ்ணாபுரம் வரையில் இரு புறமும் அமைக்கப்படும் கடைகளுக்கான ஏலம் துவங்கியுள்ளது.


இதில், கடந்த 15ம் தேதி, புதுப்பாளையம் பாலம் முதல் தண்ணீர்பந்தல் வரையிலான ஏலமும், 16ல், வெள்ளைப்பிள்ளையார் கோவில் முதல் புதுப்பாளையம் பாலம் வரையும் ஏலம் நடந்தது. முதல்நாள் நடந்த ஏலத்தில், பருவாச்சியை சேர்ந்த கோபிநாத் ஏலம் 24 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
அடுத்த ஏலத்தில், 74 பேர் டெபாஸிட் தொகை செலுத்தியும், அரசே கடைகளை எடுத்து நடத்த வேண்டும் என உள்ளூர் மக்களின் கோரிக்கை வலுத்ததால், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து, ஏலம் ரத்து செய்யப்பட்டது, 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில், புதுப்பாளையம் பாலத்திலிருந்து தண்ணீர்பந்தல் வரை நடந்த ஏலத்தை ரத்து செய்துவிட்டு, அதையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என, பொதுமக்களும், வியாபாரிகள் சங்கமும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது சம்பந்தமான அமைதி பேச்சு வார்த்தை நேற்று முன்தினம், அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் நடந்தது. அப்போது, ஏற்கனவே அரசு ஏற்று நடத்தியதை போல, ஒவ்வொரு கடைக்கும் வாடகை நிர்ணயம் செய்து, இந்தாண்டும் நடத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


இதில், உடன்பாடு ஏற்படாததால், வரும் 22ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது.
இதுகுறித்து விவசாயி ராஜூ கூறியதாவது;
குருநாத சுவாமி கோவில் பண்டிகையின் போது, இரு புறங்களில் அமைக்கப்படும் கடைகளுக்கு ஏலம் நடந்து வருகிறது. கொரானாவுக்கு முன்பு வரை, அதிகபட்சம் 4 லட்சம் வரை தான் ஏலம் எடுத்தனர்.


அப்போது, ஒவ்வொரு கடைக்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என, யூனியன் தரப்பில் விலை பட்டியலிட்டு கொடுத்தனர். ஆனால், கொரானாவுக்கு பிறகு, செல்வாக்கு உள்ளவர்கள், ‘ஈகோ’ பிரச்சினையால் 20 லட்சத்துக்கு மேல், அதிக விலைக்கு ஏலம் எடுக்கின்றனர்.
இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கடந்த 15ல், புதுப்பாளையம் பாலம் முதல் தண்ணீர்பந்தல் வரை நடந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு கடைக்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என பட்டியல் தயார் செய்து, அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *