தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் அருகே சூதாட்டம் மற்றும் சேவல் சண்டை: 17 பேர் விசாரணை, பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத சூதாட்டம் மற்றும் சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, வேங்கிபாளையம் ஓடைக்குள் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த இரண்டு குழுக்கள் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டனஅங்கு இருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 104 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் சூதாட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள செம்மம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 சேவல்கள் மற்றும் ரூ.800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேவல் சண்டை நடத்த பயன்படுத்தப்பட்ட பொருட்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
இந்த இரண்டு சம்பவங்களும் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.