தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம் – இரண்டு சோதனைச் சாவடிகளில் பார்வையாளர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மொசுக்கண்டி கங்காதர் அவர்கள், கோவை – தாராபுரம் சாலையில் அமைந்துள்ள குண்டடம் பிரிவு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த நிலையான கண்காணிப்பு குழு–3 (Static Surveillance Team–3) செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, திருப்பூர் – ஒட்டன்சத்திரம் சாலையில் அமைந்துள்ள எரகாம்பட்டி சோதனைச் சாவடிக்கும் சென்று, அங்கு பணியாற்றி வந்த நிலையான கண்காணிப்பு குழு–1C (Static Surveillance Team–1C) பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
இரு சோதனைச் சாவடிகளிலும், வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்படுகிறதா, அனுமதி இல்லாமல் பணம், பரிசுப் பொருட்கள் அல்லது மதுபானங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை அதிகாரிகள் எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்பதை அவர் கேட்டறிந்தார்.
மேலும், சோதனை பதிவுகள், பறிமுதல் விவரங்கள், தினசரி அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களையும் பார்வையிட்டு, அவை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசார் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு, தேர்தல் விதிமுறைகள் மீறப்படாத வகையில் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, கண்காணிப்பு பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தினார்.
தாராபுரம் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.