நன்னிலம்., ஏப்ரல். 07

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகமது முபாரக், அதிமுக சார்பில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி, சசிகலா அணி சார்பில் வெள்ளாளர் முன்னேற்ற கழக வேட்பாளர் எம்.என்.பி.ராஜா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக், அதிமுக வேட்பாளர் காமராஜ், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி, தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரபாகரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி தெரிவித்தார்.

இந்த நிலையில் சசிகலா கூட்டணியில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த எம்.என்.பி. ராஜாவுக்கு முன்மொழிந்த நபர்களை, அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் கடத்தியதாக கூறி நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இருந்தும் சமாதானம் அடையாத சசிகலா அணி, வெள்ளாளர் முன்னேற்ற சங்க வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் வேட்பு மனு பரிசீலனை அறைக்குள் சென்று கோஷம் எழுப்பினர். இதனால் வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதுமே பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜரின் சகோதரர் ஆர்ஜி. குமார் தன்னை கடத்தியதாக கூறி ராமகிருஷ்ணன் என்பவர் வீடியோ பதிவிட்டுள்ளார்.

இது குறித்து சசிகலா அணி வேட்பாளர் வெள்ளாளர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி தலைவர் எம்.என்.பி.ராஜா கூறும்போது… முன்னாள் அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் முன்னிலையில் வெள்ளாளர் சங்க நிர்வாகிகளை தாக்கியும், கொச்சைப்படுத்தியும் பேசினார்கள்.

படை பலமும், பணம் பலமும் இங்கு செல்லுபடி ஆகாது. ஜனநாயகத்தை காக்க வேண்டும். எங்களுடைய நிர்வாகிகள் தாக்கப்படுவதை உடனடியாக காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எங்களது வேட்பாளர் வாகனத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, மீண்டும் வேட்பு மனு தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் முன்னிலையில் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தீவிர பரிசீலனைக்குப் பிறகு சசிகலா அணி வேட்பாளர் எம் என் பி ராஜாவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி தெரிவித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு வாகனம் முன்னே செல்ல வேட்பாளர் எம் என் பி ராஜா அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *