எபி பிரபாகரன், பெரம்பலூர், செய்தியாளர்.
பெரம்பலூர்.ஏப்.08 பெரம்பலூர் சட்டமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா, தமிழ்ச்செல்வன் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உட்பட பலரும் வாக்கு சேகரித்தனர்.
இந்நிலையில் இன்று மாலை வேட்பாளர் தமிழ்ச்செல்வனோடு பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சியை சேர்ந்தவர்களோடு இன்று வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட சமத்துவபுரம், அயன் பேரையூர், பேரையூர், தைக்கால், வி. களத்தூர் வள்ளியூர், மேற்கு மரவநத்தம், பழைய மரவநத்தம், ராயப்பா நகர், வி. களத்தூர், வண்ணாரப்பூண்டி, வண்ணாரப்பூண்டி காலனி, ராம்ஜி நகர், திருவாலந்துறை, சு. அகரம் போன்ற கிராமங்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்.
வாக்காளர்களிடம் பேசும்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும், ஆண்களுக்கும், மகளிர்க்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும், 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் இலவச திட்டம் நடைபெற படுத்தப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், முதியோர் உதவித்தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்காக கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், சிறுபான்மை சமுக பெண்களுக்கு சுய தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் பேசினார்.
மேலும் எறையூர் நரிக்குறவர்கள் வாழும் பகுதிக்குச் சென்ற வேட்பாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை திமுக அரசு பறித்துக் கொண்டது. ஐயா எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்த உடன் உடனடியாக உங்களுக்கு அந்த இடம் மீண்டும் பெற்றுத் தரப்படும் என்றும் வாக்குறுதியை அளித்த போது அந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்கனவே 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக தான் இருந்தபோது என்னென்ன நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது என்பதையும் நினைவு படுத்தி பேசினார். வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் சென்ற இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் வரவேற்றதை பார்க்க முடிந்தது.