​தமிழகத்தில் வருகின்ற சித்திரை மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரும், நுண்கலை கலைஞருமான யு.எம்.டி. ராஜா, தனது தனித்துவமான கலைத்திறன் மூலம் ஒரு புதிய விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

​ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத் தொடக்கத்தில் ‘கனி காணுதல்’ என்பது தமிழர்களின் பண்பாட்டு மரபாக இருந்து வருகிறது. இந்த மங்கலமான தொடக்கத்தை ஜனநாயகத் திருவிழாவோடு இணைக்கும் விதமாக, தர்பூசணி பழத்தில் மிக நுணுக்கமான முறையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை அவர் செதுக்கியுள்ளார்.

​அதில், “சித்திரை கனியில் 100% முத்திரை கனியாகட்டும்” என்ற வாசகத்தையும், அதனுடன் “100% ஓட்டு” என்ற முத்திரையையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். கோடைக்காலக் கனியான தர்பூசணியைத் தேர்ந்தெடுத்து, அதில் தேர்தல் விழிப்புணர்வைச் செதுக்கியிருப்பது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

​இது குறித்து யு.எம்.டி. ராஜா கூறுகையில், “வரும் சித்திரை மாதத்தில் மக்கள் கனி காணும் போது, அந்த மகிழ்ச்சி நாட்டின் வளர்ச்சியான வாக்களிப்பிலும் பிரதிபலிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்களிப்பதே ஒரு வலிமையான ஜனநாயகத்திற்கு அழகு. அந்தச் செய்தியை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவே இந்தத் தர்பூசணி விழிப்புணர்வு வடிவமைப்பை உருவாக்கியுள்ளேன்,” என்று தெரிவித்தார்.
​சமூக அக்கறையுடன் கலைநயத்தையும் புகுத்தி அவர் செய்துள்ள இந்த விழிப்புணர்வுப் பணி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், தேர்தல் ஆணையத்தின் இலக்கான ‘100 சதவீத வாக்குப்பதிவு’ என்ற நோக்கத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *