காஞ்சிபுரம், ஜூலை 14:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் செயல்பட்டு வரும் அப்போலோ மருத்துவ தகவல் மையத்தில், வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் செரிமான நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், செரிமான நோய், கல்லீரல் மற்றும் மேம்பட்ட எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் ஐ. சுபா கலந்துகொண்டு, உணவு விழுங்குவதில் சிரமம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி, வயிற்று வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மூலம், கல்லீரல் மற்றும் கணைய நோய்கள், மஞ்சள் காமாலை, குடல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு செரிமான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஐ. சுபா, “இன்றைய இளைஞர்கள் புகைப்பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்தப் பழக்கங்களும், சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாத பழக்கமும் செரிமானக் கோளாறுகளை அதிகரிக்கின்றன,” என்றார்.
மேலும், “இரவு முழுவதும் தூங்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். தூக்கமின்மையால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அதிகப்படியான அமிலச் சுரப்பு உள்ளிட்ட பல்வேறு செரிமான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, இரவு நேரங்களில் செல்போன் பயன்பாட்டை குறைத்து, போதிய தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்,” என அறிவுறுத்தினார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களிடம் நோயாளிகள் ஆலோசனை பெற காஞ்சிபுரம் அப்போலோ மருத்துவ தகவல் மையம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. மேலும், பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மேல்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் சென்னைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். சென்னையிலிருந்து மருத்துவர்கள் வாரந்தோறும் இம்மையத்திற்கு வருகை தந்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
அப்போலோ மருத்துவக் குழுமம் நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ தகவல் மையங்களை அமைத்து சேவையாற்றி வருகிறது.
இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பாலாஜி, காஞ்சிபுரம் நிர்வாகிகள் முருகன், மைதிலி மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஸ்ரீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.