தமிழகம் முழுதும் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு உற்சவம் சித்திரை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு செவ்வாய்கிழமையன்று வந்தமையால் அன்று திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் ஆண்டு முழுதும் வாழ்வில் மங்கலங்கள் பெருகும் என்பதால் திருக்கோயில்களுக்குத் திரளான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகம் முழுதும் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகளும் உற்சவங்களும் தமிழ்க் கலாச்சாரத்தைக் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஒரகடம் அடுத்துள்ள வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டது.

அதிகாலை 4.15 மணிக்கு கோ பூஜையும் 5 மணிக்கு விசுக்கனி தரிசனமும் நடைபெற்றது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கருவறை மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்னர் 9 தட்டுகளில் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்கொடி, அன்னாசி, வாழை, பலா முதலிய பழங்கள், மலர்மாலைகள், கண்ணாடி, உப்பு, அரிசி, பருப்பு வகைகள் முதலிய மங்கலப் பொருட்கள் வைக்கப்பட்டன. மூலவர் முருகப்பெருமான் முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். பிறகு மூலவருக்குப் பலவித ஆராதனைகள் செய்யப்பட்டு விசுக்கனி தரிசனம் நடைபெற்றது. வருடப் பிறப்பை முன்னிட்டு திரளான பக்தர்கள் காலையிலேயே திருக்கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து 5.15 மணிக்கு உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சித்திரைக் கல்யாண உற்சவம் நடைபெற்றது. மற்றொரு உற்சவர் கோடையாண்டவருக்கு பாதாம் முந்திரி ஏலக்காய் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார்.

காலை 8.30 மணிக்கு மயில் மண்டபத்தில் பராபவ புதுவருட பஞ்சாங்கப் படனம் நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் பராபவ ஆண்டு பஞ்சாக்கத்தை வாசித்து ஆண்டுப்பலன்களைக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து புது வருடப் பிறப்பை முன்னிட்டு பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ்ப்புத்தாண்டு உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயில் மூலவர் மகா மண்டபத்தில் பலவித பழங்களாலும் பூக்களாலும் அலங்காரம் செய்யபட்டது. இராஜகோபுரம் உள்ளிட்ட விமானங்கள் வண்ணமின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தமிழ்ப்புத்தாண்டு உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள் அறிவுரையின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *