புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன் வடிவேலு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனிடையே கடந்த 12ஆம் தேதி கட்டிட வேலைக்கு சென்ற தனது தாய் வீடு திரும்பாததால் அமுதாவை காணவில்லை என மூத்த மகன் வடிவேல் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதாவை தேடிவந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அமுதா உடன் பணிபுரிந்த புதுச்சேரி, தருமாபுரி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பரந்தாமன் என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டதில், கொத்தனார் பரந்தாமனுக்கும் அமுதாவிற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.
இதன் காரணமாக அமுதாவிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி பரந்தாமன் புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பூத்துரை அருகே உள்ள முந்திரி தோப்பிற்குள் அமுதாவை வரவழைத்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த அமுதாவிடம் தனக்கு கொடுக்க வேண்டிய பணம் குறித்து பரந்தாமன் கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பரந்தாமன் அமுதாவை அடித்தும்,கழுத்தை நெறித்தும் கொலை செய்து முந்திரி தோப்பிற்குள் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து அமுதாவை கொலை செய்து புதைக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பூத்துறை முந்திரி தோப்பிற்கு சென்ற புதுச்சேரி மற்றும் தமிழக போலீசார் புதைக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த அமுதாவின் உடலை மீட்டனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் புதுச்சேரி அரசு கதிர்காம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.