தூத்துக்குடி, ஏப். 20:

தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டெண்டர்களையும் அதற்கான பணி உத்தரவுகளையும் மாநகராட்சி ஆணையர் ரத்து செய்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் மதுபாலன் அவர்களால் கடந்த 2025 ஏப்ரல் 4ஆம் தேதி மின்னணு ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதில் மொத்தம் ஐந்து பணிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 1, 2 மற்றும் 5ஆம் எண்களில் இடம்பெற்ற பணிகளாக பி.என்.டி. காலனி 12வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானம்,

மாநகராட்சி அலுவலகத்தின் பின்புற தார்சாலை மற்றும் கருப்பட்டி சொசைட்டி ஜங்ஷனில் உள்ள ஆயிரம் பிறை பூங்காவில் வேலி அமைத்து மின்விளக்குகள் நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

இதில் பி என் டி காலனியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கருப்பட்டி சொசைட்டி அருகில் உள்ள ஆயிரம் முறை பூங்காவில் உள்ள பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு, 2025 பிப்ரவரி 17ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜூவன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டதாகவும் அதேபோல் மாநகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலை அமைக்கும் பணியானது டெண்டர் விடுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட தாகவும் எனவே இந்த குறிப்பிட்ட வேலைக்கான டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு ரிட் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு பெற்றிருந்தார்.

இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து, குறிப்பிடப்பட்ட மூன்று இடங்களையும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி, கடந்த மார்ச் 15ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்த ஆணையர், முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில்
தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக உள்ள ப்ரியங்கா அவர்கள் சம்பந்தப்பட்ட டெண்டர்களையும், அதற்கான பணி உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் பரப்புரையானது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் வேலையில் இந்த டெண்டர் ரத்து உத்தரவானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *