ஈகை குணம் கொண்ட 57ஆவது பெற்றோருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கிய மக்கள் சக்தி இயக்கத்தினர்!

திருச்சி, மண்ணச்சநல்லூரில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டது மேலும் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி, மண்ணச்சநல்லூர் ஆனந்த் நகரை சேர்ந்தவர் திரு அண்ணாசுந்தரம். இவரது மனைவி திருமதி சுபத்ரா சமயபுரத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் நிகில் வெங்கடேஷ் (வயது 25) பட்டய பொறியாளர் இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார். இதையடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய நிகிலின் பெற்றோர் முன் வந்தனர். அதன்பின் நிகிலின் உடலில் இருந்து இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்டவைகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.நிகில் வெங்கடேஷ் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


அந்நிலையில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத்தலைவர் வெ.இரா. சந்திரசேகர், துணைச் செயலாளர் ஆர். இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச்செயலாளர் ஆர்.கே.ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் உள்ளிட்டோர் உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய பெற்றோர் வாழும் மண்ணச்சநல்லூர் இல்லத்திற்கு சென்று நிகில் வெங்கடேஷ் பெற்றோர் திரு அண்ணாசுந்தரம் திருமதி சுபத்ரா குடும்பத்தினரை சந்தித்து, தங்களுடைய மகன் மூளைச்சாவு அடைந்தது எங்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது.


அந்த சூழலிலும் தாங்கள் பிறருக்கு உதவ வேண்டும் என்ற முடிவை எடுத்து உடல் உறுப்புகளை கொடையாக வழங்கியுள்ளீர்கள்.அவர் உயிருடன் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.உடல் உறுப்பு கொடையாக பெறுபவர்கள் உருவத்தில் தங்கள் மகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தங்கள் ஈகைக்குணத்தினை பாராட்டி நன்றி கூறி வணங்குகிறோம் என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *