திருவாரூர்., ஏப்ரல் 24.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 259வது ஜெயந்தி விழாவினையொட்டி மேலவடம்போக்கித்தெருவில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளின் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை வழிபாடு நடத்தினர்.

சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீசத்குருதியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் இரண்டாவதாக அவதரித்த ஸ்ரீசத்குரு தியாகராஜர் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள இல்லம் ஒன்றில் கிபி.1767ம் ஆண்டு சித்திரை மாதம் பூச நட்சத்திர நாளில் பிறந்தார்.

இவர் வாழ்நாளில் எண்ணற்ற சங்கீத கீர்த்தனைகளை இறைவன் மீது இயற்றியுள்ளார். குறிப்பாக ஸ்ரீஇராமபிரான் மீது ஸ்ரீசத்குரு தியாகராஜர் சங்கீத கீர்த்தனைகளை பாடியுள்ளார். இவரது எண்ணற்ற கீர்த்தனைகளில் மிகவும் பிரசித்திபெற்றது பஞ்சரெத்தின கீர்த்தனைகள்.

ஸ்ரீசத்குரு தியாகராஜர் வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கை வாழ்ந்ததோடு ஒவ்வொரு நாளும் தனது குடும்ப தேவைக்காக நாள்தோறும் உஞ்சவிருத்தி பஜனை மேற்கொண்டு பிக்க்ஷை பாத்திரம் ஏந்தி அரிசியை தானமாக பெற்று மறுநாளுக்கான சேமிப்பு செய்யாமல் வாழ்க்கை வாழ்ந்தவர்.

அவரது எளிய வாழ்க்கையினை இக்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் வகையில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் வேடம் தரித்த ஸ்ரீராஜு பாகவதர் என்பவர் உஞ்சவிருத்தி பஜனை பாடல்களை பாடியவாறு திருவாரூர் வீதிகளில் பிக்க்ஷை பாத்திரம் ஏந்தி அரிசியை தானாக பெற்ற நிகழ்வு பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குருதியாகராஜரின் ஜெயந்தி விழாவினையொட்டி அவர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவாரூர் மேலவடம்போக்கித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் அமர்ந்து ஸ்ரீசத்குரு தியாகராஜர் இயற்றிய பிரசித்திபெற்ற பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்து ஸ்ரீசத்குரு தியாகராஜரை மனமுருக வழிபட்டனர். இந்நிகழ்வில் திரளான கர்நாடக சங்கீத இசை ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *