அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவில் அங்கன்வாடி மையமும், நியாயவிலை கடையும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் முள்புதர்கள் மற்றும் செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகிலேயே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு, அவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு வரும் குழந்தைகளின் சுகாதாரத்திற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், புதர்கள் அதிகமாக இருப்பதால் விஷப்பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அங்கன்வாடி மையத்திற்கு வரும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் நியாய விலை கடைக்கு தினமும் வருகை தரும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை மாநகராட்சியிடம் புகார் அளித்து, புதர்களை அகற்றி சுத்தம் செய்யவும், குப்பைகளை உடனடியாக அகற்றவும் கோரிக்கை விடுத்திருந்தாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அங்குள்ள புதர்கள், செடிகள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்றி, அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் மற்றும் நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சத்தியசீலன் வலியுறுத்தியுள்ளார்