பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக துவங்கப்பட்ட புதிய நூலகத்தை தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்
கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில்,பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகளின் பயன்பாட்டிற்கென பொது நூலகம் அமைக்கப்பட்டது…
இந்நிலையில் இதற்கான துவக்க விழா, தமிழக அரசு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவருமான முகமது ரபி தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு பொது நூலகத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து அவர்,இந்த நூலகத்தை நவீன மயமாக்கும் பொருட்டு பல்வேறு வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முகம்மது ரபி, மாணவர்களின் கல்வியறிவு மேம்படுவதற்கு வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார் . இது போன்ற பொது நூலகங்களை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த அவர் நூலகமும் நூல்களும் அறிவு சார்ந்த சமூகத்தை கட்டமைக்கும் ஆயுதம் என மாணவர்கள் சமூக நல்லிணக்க பணிகளிலும் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்..
நிகழ்ச்சியில்,அருள் கார்டன் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சஞ்சய் காந்தி, ஜார்ஜ்,ரத்தின சபாபதி பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம். ராமசாமி, கோவை மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். பூபேஷ், அபுதாகீர், ராதாகிருஷ்ணன், கோவை தல்ஹா,வழக்கறிஞர் முகமது இஸ்மாயில், ஜாபர் சாதிக், மோகன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.