கோவை குனியமுத்தூர்:
தமிழக முதல்வர் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுங்கலை கலைஞர் (Miniature Artist) குனியமுத்தூர் UMT ராஜா அவர்கள் தனது அசாத்திய திறமையால் வினோதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு “200 யூனிட் இலவச மின்சாரம்” வழங்கி ஒளியேற்றிய முதல்வர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, 3 மின்சாரக் குண்டு பல்புகளுக்குள் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்புகளின் உள்பகுதியில் சிறிய கம்பிகளை மிக லாவகமாக வளைத்து, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, நீலம், கருப்பு ஆகிய வர்ணங்களைப் பயன்படுத்தி மிக நுணுக்கமாக முதல்வரின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
பல்பின் உட்புறத்திலேயே “மின்சாரக் கண்ணா அரசாலும் மன்னா” என்ற வாசகமும், 52-வது வயதைக் குறிக்கும் எண்களும், பிறந்தநாள் வாழ்த்துகளும் எழிலுற தீட்டப்பட்டுள்ளன. மிகக் கடினமான, சவாலான இந்த நுணுக்கமான கலைப்படைப்பை உருவாக்க கலைஞர் UMT ராஜா அவர்களுக்கு இரண்டு நாட்கள் முழுமையாகத் தேவைப்பட்டுள்ளது. ‘மின்சாரக் கண்ணா’ நம் முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மின்சாரக் குண்டு பல்பு ஓவியத்தை அர்ப்பணிப்பதாக கலைஞர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.