நீடாமங்கலம்.,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் அடுத்துள்ள ஆதனூர் மண்டபம். கிராமத்தில் பிரதான சாலையின் அருகே குடியிருப்புகளுக்கு நடுவே பங்கஜவல்லி, வாசுதேவன் தம்பதியருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு இந்துஸ் டவர் நிறுவனம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது .
செல்போன் டவர் அமைய உள்ள இடத்தை சுற்றி 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக சக்தி வாய்ந்த செல்போன் உயர் கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வரும் அதிகபட்ச கதிர் வீச்சால் குழந்தைகள் பெரியவர்கள், கர்ப்பிணிகள் விலங்குகள் பறவைகள் என அப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்தப் பகுதியில் செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை கைவிட்டு குடியிருப்புகள் இல்லாத பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வட்டாட்சியர் ஒப்புதலோடு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் , செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆதனூர் மண்டபம் கிராம பொதுமக்கள் கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.