திருவாரூர்.,
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில கவுரவ தலைவர் நன்னில நடராஜன் தலைமையற்றார். பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன் பங்கேற்று மேகதாட்டு அணை பாதிப்பு குறித்து எடுத்துரைத்த
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதலமைச்சர் விஜய் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று காத்திருக்கிறோம்.
பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு இந்திய ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகள் மீனவர்கள் நலன் கருதி மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்துகிறோம்.
கர்நாடக அரசு காவிரியின் குறிக்கே கீழ்பாசன விவசாயிகள் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அனுமதி இல்லாமல் மேகதாட்டு அணை மற்றும் எந்த ஒரு இடத்திலும் புதிய அணை கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்றம் வழங்கி உள்ளது. கர்நாடக, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் டிகே.சிவக்குமார் தனது சுய லாபத்திற்காக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாகவும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணை கட்ட முயற்சிக்கிறார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு முழுமையாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு அரசாணைகள் பிறப்பித்துள்ளது.இதனைப் பின்பற்றி காவிரிமேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டுமென தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் 2025 நவம்பர் 13 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
அதே நேரத்தில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவான வகையில் கர்நாடகம் இத்தீர்ப்பை பயன்படுத்த முடியாது என உறுதிபட தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிகே சிவகுமார் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் பாட்டீலை சந்தித்து தமிழகம் சார்பில் மேகதாட்டுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் முழுமையும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பை தனக்கு சாதகமாக தவறான வகையில் திசை திருப்ப முயற்சி எடுக்கிறார்.
மேலும் நீதி மன்றத்தை அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சரிடமே கோரிக்கை விடுத்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சட்ட விரோதமாக தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை அபகரிக்கும் நோக்கோடு, சுமார் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை பாலைவனமாக மாற்றும் வகையில், உணவு உற்பத்தியை அடியோடு அழிக்கும் நோக்கோடு, விவசாயிகளையும் விவசாய தொழிலாளர்களையும் அகதிகளாக வெளியேற்றும் அடிப்படையோடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த டி.கே. சிவக்குமார் செயல்படுவதை காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடருமேயானால் தமிழக முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் கட்சி தேசிய தலைமைக்கு எடுத்துரைத்து டி கே சிவகுமார் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
மத்திய அரசும், நீர்வள ஆணையமும் கர்நாடக அரசின் மேகத்தாட்டு அணை வரைவு திட்ட அறிக்கையை சட்ட விரோதமென நிராகரிக்க வலியுறுத்தி வரும் ஜூலை 23ஆம் தேதி டெல்லியில் பாராளுமன்றத்தையும்,நீர்வள ஆணையத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மாநில அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர்,துணைத் தலைவர் பயரி கிருஷ்ணமணி, மாநில துணைச் செயலாளர் குடவாசல் சுவாமிநாதன், கடலூர் மாவட்ட செயலாளர் எம் ராமச்சந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் வேதை காரணநாதன், மாவட்ட தலைவர் புலியூர் பாலசுப்பிரமணியன்,தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம்
உள்ளிட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.