அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தனிச்சியம் உட்கடை செம்புக்குடிபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் சூழலியல் பகுப்பாய்வு நெற்பயிரில் சூழலியல் கட்டமைப்பு குறித்த பண்ணைப்பள்ளி நடைபெற்றது.
இப்பண்ணைப்பள்ளியில் நெற்பயிர் சாகுபடி செய்யும் 25 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்ட ஒருங்கிணைப்பாளர் அலங்காநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரன், விளைநிலம் பாதுகாப்போம் இயக்கம் KHET BACHAO ABHIYAN கேத் பச்சோ அபியான இயக்கத்தின் மூலம் இயற்கை விவசாயம் மற்றும் மண்வள பாதுகாப்பு விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில் எடுத்துக் கூறியதாவது சமச்சீரான உரப்பயன்பாட்டை மேற்கொள்வதன் மூலம் நிலையான வேளாண்மையை ஊக்குவித்தல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மண்வளம் மற்றும் சமச்சீரான உரப்பயன்பாட்மை மேற்கொள்வதன் மூலம் சாகுபடி செலவை குறைப்பது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, பசுந்தாள் உரப்பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இப்பள்ளியில் மதுரை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.சுரேஷ், கலந்துகொண்டு பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை அடையாளம் காணுதல், அதனை கட்டுப்படுத்தும் முறைகள், வயலில் காணும் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல், வயல்வெளிகளில் விளக்கு பொறிவைத்தல், இனக்கவர்ச்சி பொறி வைத்தல், டி வடிவ குச்சிகள் வைத்தல், பயிர் பொருளாதார சேத நிலைகளுக்கு அதிகமான நிலையில் இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துதல், இரசாயன உரங்களை பகிர்ந்தளித்தல், வரப்புகளில் உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயறு போன்றவை சாகுபடி செய்தல்,பயிர் சுழற்சி முறைகள் கையாளுதல் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்கும் முறைகளுடன் சாகுபடி செய்தல் அவசியம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும் நெற்பயிரில் கோனோவீடர் மூலம் களை நிர்வாகம், இலைவண்ண அட்டை கொண்டு தழைச்சத்தை தேவைக்கேற்ப பிரித்து இடுதல், நீர் மறைய நீர் கட்டுதல், நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் அதிகம் காணப்படுவதால் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாக முறைகளான இயற்கை முறைகளான பஞ்சகாவ்யம் வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பு, மஞ்சள் வண்ண அட்டை, விளக்கு பொறி, இனகவர்ச்சி பொறி அங்கக வேளாண்மை முறைகளை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று வருமானத்தை கூடுதலாக பெறுமாறு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார்.
மேலும் மதுரை மாவட்ட வேளாண்மை அறிவியல் பேராசிரியர் டாக்டர் ஆனந்த் தரமான அரசு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் எனவும், தரமான விதைகளின் முக்கிய பண்புகள், விதை உற்பத்தி முறைகள், விதை முளைப்புத்திறன், அறுவடை மற்றும் சேமிப்பு, விதைச் சான்றிளிப்பு முறைகள்,அங்கக சான்று விதை உற்பத்தி முறைகள், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, உயிர் பூஞ்சான கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் உதவி வேளாண்மை அலுவலர் பால்பாண்டி, விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் (Farmer Registry), பாரத பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம், நுண்ணீர்ப் பாசன திட்டம், மத்திய மாநில அரசின் மூலமாக கிடைக்கும் மானியத் திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார்கள். பண்ணைப்பள்ளியின் முடிவில் நெற்பயிரில் வேளாண் சூழலியல் பகுப்பாய்வு நெற்பயிரில் சூழலியல் கட்டமைப்பு குறித்த தொழில்நுட்ப கருத்துக்கள் அடங்கிய பயிற்சி கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
பண்ணைப்பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப அலுவலர்களுக்கும் அலங்காநல்லூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன், நன்றி கூறினார். பண்ணைப்பள்ளிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் வசந்தி மற்றும் சௌந்தராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.