தூத்துக்குடி, ஜூன் 30:
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கேட்டரிங் கல்லூரி மாணவரை திருநங்கை ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்த மாதவன் மகன் அஜய் தேவகுமாரன் (19). இவர் கோயம்புத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் கேட்டரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
3 நாள் விடுமுறையை முடித்து நேற்று கல்லூரிக்குச் செல்வதற்காக தனியார் பேருந்தில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு இருந்த அபர்ணா (26) என்ற திருநங்கை, திடீரென மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் அவரது கழுத்து, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
ரத்தக் காயங்களுடன் இருந்த அஜய் தேவகுமாரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அபர்ணா, அஜய் தேவகுமாரனிடம் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்றபோது, அவரை ஒரு தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று தனது செல்போனை பறித்துச் சென்றதாக புகார் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று புதிய பேருந்து நிலையத்தில் இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளனர். அப்போது செல்போனை திருப்பித் தருமாறு அபர்ணா கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கத்தியால் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தப்பிச் சென்ற அபர்ணாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருநெல்வேலி கொக்கிரகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக நடந்ததாகக் கூறப்படும் இந்த கத்திக்குத்து சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.