சாலையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்-சென்னை மாநகராட்சி புதிய முயற்சி
சென்னை, ஜூன் 30:
சாலைகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், பொதுமக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சி சுவர்களில் அழகிய விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறது.
திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 13-வது வார்டில் சில இடங்களில் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து, குப்பை கொட்டப்படும் பகுதிகளில் உள்ள சுவர்களில் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குப்பை மேலாண்மை தொடர்பான கருத்துகளை வலியுறுத்தும் வகையில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகள் ஓவியங்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் நோய்கள் பரவுதல், சுகாதாரக் கேடுகள் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளும் சித்திரங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.
அழகிய கலை ஓவியங்கள் அமைந்துள்ள இடங்களில் குப்பை கொட்ட வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு ஓவியங்கள் தொடர்ந்து வரையப்பட்டு வருவதாகவும், தூய்மையான சென்னையை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.