கரூர், ஜூன் 30–
கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக அதிமுக தலைமையுடன் முரண்பாட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கரூர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, புதிய மாவட்டச் செயலாளராக கமலக்கண்ணனை நியமித்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அதிமுகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், கரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, “அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்” என்று முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கரூர் மாவட்டத்தில் அதிமுக தோல்வியடைந்ததற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரே காரணம் என்றும், தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியவர் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், நடைபெறவுள்ள கரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்திற்கே மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழக முதல்வர் பதவியேற்ற பிறகு இதுவரை கரூர் மாவட்டத்திற்கு வரவில்லை என்றும், கரூரில் நடைபெற்ற முக்கிய துயரச் சம்பவங்களின்போதும் வராத முதல்வராக உள்ளார் என்றும் விமர்சித்தார். அதேவேளையில், தவெக தலைவர் விஜய் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து வருவதாகவும், ஜூலை மாதத்தில் கரூர் மாவட்டத்திற்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டசபை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையே விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.