கோவை, ஜூன் 30–
மின்னணு கழிவு (E-Waste) மேலாண்மை தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தி, அவற்றை கடுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேவ் (WAVE) அறக்கட்டளையின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் டாக்டர் ஏ.பி. திவ்யா சந்திரன் வலியுறுத்தினார்.


கோவையில் கான்ஃபிடியோ லீகல் சொல்யூஷன்ஸ் சார்பில், “மின்னணு கழிவு – டிஜிட்டல் யுகத்தின் மறைந்திருக்கும் சுற்றுச்சூழல் சவால்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.


கருத்தரங்கிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் திவ்யா சந்திரன், தொழில்நுட்ப வளர்ச்சியால் மின்னணு சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதனால் மின்னணு கழிவுகளின் அளவும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். பயன்படுத்தி முடிக்கப்பட்ட மின்னணு சாதனங்களை பாதுகாப்பான முறையில் அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.


மத்திய அரசு 2023-ம் ஆண்டு மின்னணு கழிவு மேலாண்மை தொடர்பாக சட்டத் திருத்தங்களை கொண்டு வந்திருந்தாலும், அவற்றை நடைமுறையில் முழுமையாக செயல்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, மின்னணு கழிவு மேலாண்மை சட்டங்களை மேலும் கடுமையாக்கி, அவற்றின் அமலாக்கத்தை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு மின்னணு கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பாதுகாப்பான கழிவு மேலாண்மை முறைகள் மற்றும் அதுதொடர்பான சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


இதில் வழக்கறிஞர்கள் சூரியபிரபா, லட்சுமிகந்தா, ஜெயந்தி, ஜமுனா செந்தில்குமார், ரத்தின ஜோதி, சசிகலா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மின்னணு கழிவு மேலாண்மையின் அவசியம் குறித்து உரையாற்றினர். நிகழ்ச்சியில் கல்லூரியின் செயல் அதிகாரி ஜெயஸ்ரீ சூர்யகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *