பெரியகுளம், ஜூன் 30–
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்களகர ஆஞ்சநேயர் திருக்கோவிலின் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 19-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து விநாயகர் பூஜை, எஜமானர் அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாஹவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. பின்னர் பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் முதல் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, ஆஞ்சநேய மூலமந்திர ஜப ஹோமம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, பந்தர ஸ்தாபனம், ரத்தின நியாசம், அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக விமான மகா கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலை 11 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த யாகசாலை பூஜைகள் சர்வ சாதகத்தின் பெரியகுளம் பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் பரம்பரை ஸ்தானிகர் எஸ். லட்சுமணன் ஐயர் தலைமையில் வேதவிதிப்படி நடத்தப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மங்களகர ஆஞ்சநேயர் திருக்கோவில் பங்காளிகள் மற்றும் தாமரைக்குளம் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.