மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி, ஜுலை – 04
தென்காசி மாவட்டம் அருவிகளின் நகரமாகவும் சுற்றுலா தலங்களில் முக்கியமான தலமாகும் விளங்கி வருகிறது இங்கு ஆண்டுதோறும் ஜூன் ஜூலை மாதங்களில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படும் இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பணிகள் குளித்து மகிழ்வது வழக்கமான ஒன்று இந்நிலையில் கடந்த சில தினங்களாக
குற்றாலத்தில் சாரல் மழை இல்லாத நிலையிலும் அருவிகளில் கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தென்னகத்தின் ‘ஸ்பா’ என அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் சீராக இருந்தாலும் கடந்த ஜூன் மாதம் சீசன் தொடங்கிய நிலையில் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இடையிடையே வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதன் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் மட்டும் சாரல் மழை பெய்தது. மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைந்தது. ஆனால் கேரள மாநிலத்தில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளின் மலைப்பகுதிகளில் மழை பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை கேள்விப்பட்டதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து மகிழ்ச்சியுடன் உற்சாகமாக குளித்து சென்றனர்.
தற்போது குளிர்ந்த காற்று வீசுகிறது. மிதமான வெயில் அடிக்கிறது. சாரல் மழை அதிகரித்தால் அருவிகளில் அதிகரிக்கும் நீர்வரத்தினால் சுற்றுலா பயணிகள் சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர் .