மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை விலை குறைவு
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலை கட்டுகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
மதுரையை சுற்றியுள்ள மேலூர், கூத்தியார்குண்டு, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. முன்பு முகூர்த்த தினங்கள் மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500 வரை விற்பனையானது.
ஆனால் தற்போது ஆனி, ஆடி மாதங்களில் முகூர்த்த நாட்கள் இல்லாததாலும், சந்தையில் வாழை இலை வரத்து அதிகரித்ததாலும் விலை சரிந்துள்ளது. இதனால் தற்போது ஒரு கட்டு வாழை இலை ரூ.800 வரை மட்டுமே விற்பனையாகிறது. குறைந்தபட்சமாக ரூ.400 வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆவணி மாதத்தில் திருமண சீசன் தொடங்கும் நிலையில், அப்போது வாழை இலை விலை மீண்டும் உயரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.