திருவாரூர், ஜூலை 8:
திருவாரூர்–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டு மின் தூக்கிகளும் (லிப்ட்) பல நாட்களாக செயலிழந்து கிடப்பதால், பொதுமக்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, கலால் துறை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நிர்வாகப் பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகை தருகின்றனர்.


மூன்று மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் முதல் மாடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கம், இரண்டாவது மாடியில் தாட்கோ மற்றும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், மூன்றாவது மாடியில் குழந்தைகள் நலன் தொடர்பான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.


பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு மின் தூக்கிகளும் தற்போது பழுதடைந்து மூடப்பட்டுள்ளதால், அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மாடிப்படிகள் வழியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பங்கேற்க வரும் முதியவர்கள், விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் லிப்ட் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


எனவே, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயலிழந்துள்ள இரண்டு மின் தூக்கிகளையும் உடனடியாக பழுதுபார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *