சென்னை பழவந்தாங்கல், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயன் தலைமையிலான குழுவினர், காவல்துறையினருடன் இணைந்து தீவிர திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நங்கநல்லூர் 4-வது மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த மம்தா ப்ரொவிஷன் ஸ்டோர் என்ற மளிகைக் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் 4 கிலோவுக்கும் அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், விதிமீறலுக்காக அந்தக் கடைக்கு 15 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதற்கான உத்தரவு கடை உரிமையாளர் பிரகாஷிடம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் பிரகாஷை பழவந்தாங்கல் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர்.
உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.