கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு அச்சம் – கூட்டுறவு கடன் தள்ளுபடி அரசாணைக்கும் கடும் எதிர்ப்பு
திருவாரூர், ஜூலை 8: மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் 15 ஆண்டுகள் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், மேகதாட்டு அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொள்வது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளார்.
மேகதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கக் கூடாது என தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில், அந்த அறிக்கை மீண்டும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் திட்ட அறிக்கை தயாரிக்கும் உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், அதனை கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், டி.கே. சிவக்குமார் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து மேகதாட்டு அணைக்கு அனுமதி கோரியிருப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்றும், இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
மேலும், கர்நாடகாவில் ஜூலை 15-ஆம் தேதி ஓசூர்–பெங்களூரு சாலையில் போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழகத் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேகதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தேசியத் தலைமையகம் தலையிட்டு டி.கே. சிவக்குமாருக்கு சட்டப்படி செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்றும், காவிரி பிரச்சினையை இன மோதலாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனுடன், கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை விவசாயிகளை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், கடன் வசூல் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்தி, தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி.ஆர். பாண்டியன் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.