ஈரோடு, ஜூலை 10:

ஈரோடு மாவட்டம், 46 புதூர் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி கார்டன் குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பெய்த மழையால், சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புப் பகுதியின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “சாக்கடைகளில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, அடைப்புகளை சரிசெய்து, மழைநீருடன் கலந்த கழிவுநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் அடுத்த மழையில் கழிவுநீர் குடியிருப்பு வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது” என்று அச்சம் தெரிவித்தனர்.எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாக்கடை அடைப்புகளை அகற்றி, கழிவுநீர் தேங்காமல் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *