கோவை குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ் தொடங்கி வைத்தார்

இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில், சிஐஐ மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து, “யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் 3.0 ” நிகழ்ச்சி குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 14 பள்ளிகளில் இருந்து 109 மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்று, இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை ஒத்த விவாதங்கள், சட்டமசோதா கலந்துரையாடல்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பு அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ் தொடங்கி வைத்தார். குமரகுரு பொது மற்றும் போட்டித் தேர்வு மையம், குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசியல் அறிவியல் துறை மற்றும் யங் இந்தியன்ஸ் கோவை கிளை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் 15 மாணவர்கள் பிராந்திய சுற்றுக்கு தகுதி பெற்று, பின்னர் புதுதில்லியில் நடைபெறும் தேசிய இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர். நாளை நடைபெறும் நிறைவு விழாவில் கோவை மக்களவை உறுப்பினர் டாக்டர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ், இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான தூண் நாடாளுமன்றம் என்றும், எதிர்கால தலைவர்களாக உருவாக மாணவர்கள் கேட்கும் திறன், பொறுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பச்சாதாப உணர்வு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு ஒரு மக்கள் பிரதிநிதிக்குரியது. பேசுவதைவிட கவனமாகக் கேட்பது ஒரு சிறந்த தலைவரின் அடையாளம். இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களின் தனித்துவத்தை புரிந்துகொண்டு, மாறுபட்ட கருத்துக்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.

வரவேற்புரையாற்றிய யங் இந்தியன்ஸ் கோவை கிளை தலைவர் திரு. ராகுல் காமத், சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் இளைஞர்களின் குரல் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது என்றார்.

“இன்று ஒரு சமூக ஊடக பதிவு, வீடியோ அல்லது கருத்து கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது. அந்த செல்வாக்கை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். ஒரு தலைவரின் சிறப்பு அவர் சத்தமாக பேசுவதில் இல்லை; சிந்தித்து பேசுவதில்தான் உள்ளது. விவாதத்தில் வெற்றி பெறுவதைவிட, மாறுபட்ட கருத்துக்களை புரிந்துகொள்வதே உண்மையான தலைமைத்துவத்தின் அடையாளம்,” என்று அவர் தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தரின் “எழுமின், விழிமின், இலக்கை அடையும் வரை ஓயாதீர்கள்” என்ற பொன்மொழியை மேற்கோள்காட்டிய அவர், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பு இன்றைய இளைஞர்களின் கைகளில் இருப்பதாக குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் பொது நிர்வாகம் குறித்த நேரடி அனுபவத்தை வழங்கும் இந்த நிகழ்ச்சி, எதிர்கால பொறுப்பான குடிமக்களையும் தலைவர்களையும் உருவாக்கும் முக்கியமான தளமாக அமைகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *